சிறுபான்மையினரை குறி வைக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் - சர்வதேச மன்னிப்புசபை!
இலங்கை அரசாங்கமானது பயங்கரவாதத்தை எதிர்க்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது தொடர்பில், சர்வதேச மன்னிப்புச்சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக பலமுறை இலங்கை அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அதனை நிறைவேற்றவில்லை என சர்வதேச மன்னிப்புசபை குற்றம் சுமத்தியுள்ளது.
திடீர் கைதுகள்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் மொஹமட் அஸ்ஃபர் மொஹமட் அனஸ், மொஹமட் ஜுசைர் அப்துல் ஹமீட் ஜாபிர், மொஹமட் அஸீஸ் அபுபக்கர் சித்திக் மற்றும் ராவுத்தர் நைனா அஸ்னார் மரிக்கார் ஆகிய 4 பேர் கடந்த மே 18 அன்று குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை காவல்துறையினரால் கைது கைது செய்யப்பட்டனர்.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டியே சர்வதேச மன்னிப்பு சபை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அதேசமயம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்படுவார்கள் என சிறிலங்கா காவல்துறையினர் கொழும்பு நீதிவானிடம் தெரிவித்துள்ளதையும் மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச தரத்தில் விசாரணை
இதேவேளை, சுயாதீனமாக மேற்கொள்ளப்படும் கைதுகளையும், விசாரணையின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்க உதவும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
அத்துடன் சிறுபான்மையினரை குறி வைத்து இந்த சட்டம் மீள மீள பயன்படுத்தப்படுகிறது எனவும் மன்னிப்புசபை குற்றம் சாட்டுகிறது.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு அமைய உடனடியாக பாரபட்சமின்றி நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு சர்வதேச மன்னிப்புசபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
