கைதுகள் தொடரும் - பகிரங்கமாக அறிவித்தது அரசாங்கம்
பொது இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் தொடர்ந்தும் கைது செய்யும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போராட்டங்களில் ஈடுபடுபவர்களைத் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கான முழு அதிகாரமும் சுகாதார பணிப்பாளருக்கு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்திற்கு அருகில் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டு தற்போது கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்த விதம் பற்றி தென்னிலங்கையில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கொழும்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மதுர வித்தானகே, இனியும் ஆர்ப்பாட்டங்களை நடத்துபவர்களை கைது செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் தொடர்ந்தும் இருப்பதாகக் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் கடுமையான தனிமைப்படுத்தல் சட்டங்களைக் கொண்ட அறிவித்தலை விடுத்திருக்கவில்லை. 1993ஆம் ஆண்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவ்வாறு மக்கள் ஒன்றுகூடுகின்ற இடங்களில் காவல்துறைக்கு கட்டளையிட்டு கைது செய்வதற்கான அதிகாரம் இருக்கின்றது.
எதிர்வரும் நாட்களில் பதவி, தராதரம் பாராமல், கைது செய்யப்படுவார்கள் என்பதோடு, அதற்கான தகுந்த சட்டநடவடிக்கைகளையும் எடுப்பதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் அறிவித்திருக்கின்றார். கட்சி பேதங்களைப் பார்த்து நாங்கள் எவரையும் கைது செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.