ஆசிய கிண்ணத் தொடர் - நேபாளத்தை சுருட்டியது பாகிஸ்தான்
ஆசிய கிண்ணத் தொடரில் துடுப்பாட்டம், பந்து வீச்சு என மிரட்டிய உலகின் முதல்தர அணியான பாகிஸ்தான் நேபாளத்தை சொற்ப ஓட்டங்களுக்குள் சுருட்டி 238 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றது.
பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் இன்று பகலிரவாக இடம்பெற்ற இந்தப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
அதிரடி காட்டிய பாபர் அசாம்
இதன்படி முதலில் களமிறங்கிய அவ்வணி சார்பில் தொடக்க வீரர்கள் பஹார் ஜமான் 14 ஓட்டங்களிலும், இமாம் உல் ஹக் 5 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் அபாரமாக விளையாடி 131 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்சர்களை விளாசி 151 ஓட்டங்களை குவித்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய முகமது ரிஸ்வான் 44 ஓட்டங்களை எடுத்து ரன் அவுட்டானார். அடுத்த வந்த சல்மான் ஆகா 5 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
முதலாவது கன்னிச் சதம்
பின்னர் இப்திகார் அகமதுவின் ஆட்டத்தில் அனல் பறந்தது.இவர் 71 பந்துகளில் 109 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.இது இவரது முதலாவது கன்னிச் சதமாகும். இறுதியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 342 ஓட்டங்களை குவித்தது.
பந்து வீச்சில் சோம்பால் கமி 02,கரன் மற்றும் சன்டீப் இருவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
இறுதியில் அவ்வணி 23.4 ஓவர்களில்104 ஓட்டங்களை மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது.
அவ்வணி சார்பாக சோம்பால் கமி மற்றும் ஆரிப் ஷேக் முறையே 28,26 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் மிரட்டல்
பந்துவீச்சில் மிரட்டிய சதாப் கான் 04, சகீன் ஷா அப்ரிடி,ஹரிஸ் ரவூப் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இந்தப்போட்டியின் ஆட்டநாயகனாக பாபர் அசாம் தெரிவானார்.
நாளையதினம் இலங்கை பங்களாதேஷ் அணிகள் கொழும்பில் மோதவுள்ளன.
images -espn