அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேக்கு ஏற்பட்டுள்ள நிலை
விக்கி லீக்ஸ் எனும் இணையதளத்தில் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது காதலி ஸ்டெல்லா மோரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டெல்லா மோரிஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி நடந்த நீதிமன்றம் விசாரணைக்கு அசாஞ்சே காணொலி காட்சி வாயிலாக முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.
தற்போதும் அவருக்கு அந்த நோய் பாதிப்பு உள்ளது. எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஜூலியன் அசாஞ்சே தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு தடை விதித்து லண்டன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இங்கிலாந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்துள்ளது.
எனவே அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான கதவுகள் திறந்துள்ளன.
இந்நிலையில் அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.