இஸ்ரேலில் சிக்கிய இலங்கையர்கள்: ரணில் விடுத்த அதிரடி உத்தரவு
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, இஸ்ரேலில் வாழும் இலங்கை மக்களின் தேவைகள் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை வழங்குவதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இஸ்ரேலில் பணிபுரியும் அல்லது வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இலங்கையர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பின் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் சிரமங்கள் இருப்பின், இலங்கை அதிகாரிகளுக்கு நேரடியாகத் அறிவிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தொலைபேசி எண்கள்
அதன்படி, தொலைபேசி எண் (+94) 117966396, வாட்ஸ்அப் எண் (+94) 767463391 அல்லது opscenga@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தேவையான தகவல்களை அறிய முடியும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட குடிவரவு குடியகல்வு நடைமுறைகள் மற்றும் வேறு எந்த முறையின் கீழும் இஸ்ரேலில் தங்கியுள்ள எந்தவொரு இலங்கையருக்கும் இந்த சேவையைப் பெற முடியும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது.
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        