புதிய நோக்கத்துடன் பயணிக்க இலங்கையர்களுக்கு அழைப்பு
அமெரிக்க பிரஜையின் அதிகார செயற்பாட்டிற்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை எனவும் புதிய நோக்கத்துடன் பயணிக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் (Athuraliye Rathana Thero )தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து, கொழும்பில் நேற்று (2) நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“ நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை என்ற நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த வேண்டிய நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.
ருவன்வெலிசாய முன்னிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதா? இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் படி, சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்துகிறோம்.
நாட்டின் எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க வேண்டும். இங்கு ஒன்றுகூடியிருக்கின்ற 11 பங்காளிக் கட்சிகளும் ஒன்றிணைந்த சக்தியாக செயற்படுவோம்” என்றார்.
