செங்கடலில் ஹவுதி படையினர் அட்டூழியம்: இந்திய கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
செங்கடலில் 25 இந்திய மாலுமிகளுடன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்களால் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று (23) இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க இராணுவம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் மறுநாள் (24) பதிவொன்றினையும் வெளியிட்டிருந்தது.
இந்த தாக்குதல் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
25 இந்திய மாலுமிகள்
"கடந்த சனிக்கிழமை ஏமனில் உள்ள ஹவுதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து செங்கடலில் ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கபோன் நாட்டுக்குச் சொந்தமான ‘எம்வி சாய்பாபா’ என்ற கப்பல் தாக்குதலுக்குள்ளானது, அந்தக் கப்பலில் கச்சா எண்ணெய் ஏற்றி வரப்பட்டுள்ளது, மாத்திரமல்லாது, அதில் இந்தியக் கொடி பறந்தது.
அதிஷ்டவசமாக ட்ரோன் தாக்குதலினால் கப்பலில் இருந்தவா்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து, இந்திய இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, தாக்குதலுக்குள்ளான ‘எம்வி சாய்பாபா’ கப்பலில் இருந்த 25 மாலுமிகளும் இந்தியா்கள், இவர்களில் எவருக்கும் தாக்குதலின் போது காயமோ, உயிரிழபோ ஏற்படவில்லை என கூறியுள்ளது.
லைபீரிய நாட்டு எண்ணெய்க் கப்பல்
இதே போல் கடந்த சனிக்கிழமையன்று (23) சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற ‘எம்.வி.கெம் புளூட்டோ’ என்ற லைபீரிய நாட்டு எண்ணெய்க் கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் போதும் அதிஷ்டவசமாக எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை, இதையடுத்து, இந்திய கடற்படை கப்பல்களின் பாதுகாப்புடன் சரக்கு கப்பல் மும்பை நோக்கி சனிக்கிழமை இரவு மீண்டும் புறப்பட்ட நிலையில், இந்தக்கப்பல் இன்று (25) மும்பையை வந்தடையும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், அந்தக் கப்பல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் இந்த நிலைமையை இந்தியக் கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை விசாரணை
அதுமாத்திரமல்லாமல் இந்தச்சம்பவம் தொடா்பாக இந்திய கடற்படை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடரும் போரால் உலகின் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் நீடித்து வருவதனால், ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது.
ஆனால் இதுவரை ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்கிய கப்பல்கள் அனைத்தும் இஸ்ரேலுக்குப் பயணித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.