ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் மீது தாக்குதல்
கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதிக்கம் கொழும்பில் காணப்படும் நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் தமது வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் முறைப்பாடு
கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தெமட்டகொட காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலுவலகத்துக்குள் பலர் புகுந்து விளம்பர பலகைகளை கடுமையாக சேதப்படுத்தியதாக அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ரணிலின் புதியதொரு கலாசாரம்
இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மிரட்டுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க புதியதொரு கலாசாரத்தை உருவாக்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த புதிய கலாசாரத்தின் ஒரு பகுதியாக கட்சி அலுவலகங்கள் மீதான தாக்குதல் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிபர் மாளிகையை எரித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
