டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் முன்னேற்றம்!
இந்த ஆண்டுக்கான டெங்கு நோய் தொற்றாளர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையான தொற்றாளர்கள் பதிவான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 5,189 ஆக பதிவாகியுள்ளது. இதுவே இந்த ஆண்டில் இதுவரை பதிவான மிக குறைந்த எண்ணிக்கையாகும்.
தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இதுவரை மொத்தம் 62,029 டெங்கு நோயாளர்கள் இந்த ஆண்டு (2023) செப்டம்பர் முதலாம் திகதி வரை பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணம்
இதில் அதிகபட்ச எண்ணிக்கையான 13,187 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
மேலும், மேல் மாகாணத்தில் 30,271 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது மாகாணங்களின் அடிப்படையில் அதிக எண்ணிக்கையாகும்.
அது மாத்திரமல்லாமல், டெங்கு நோய் பரவும் ஆபத்துள்ள இடங்களாக 27 பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.
இதுவரையில் டெங்கு நோயினால் 38 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.