எரிவாயு வெடிப்புக்கு இதுதான் காரணம்! கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டு
கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு, எரிவாயு கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட கலவை மாற்றமே காரணம் என அரச தலைவர் நியமித்த விசேட நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பாலகே (Shanta Valpalake) தெரிவித்துள்ளார்.
குறித்த குழு நேற்றைய தினம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து தங்களின் அறிக்கையினை சமர்ப்பித்துள்ளனர்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அண்மைய நாட்களில் இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புக்களும் எரிவாயு கொள்கலன்களும் வெடித்துச் சிதறியிருந்தன.
இதுதொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தன. அதுமாத்திரமன்றி பாவனையாளர்களை குண்டு வைத்துக் கொல்வதற்கு இணையானது என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாட்டில் எரிவாயு கொள்வனவு செய்வதில் மக்கள் தயக்கம் காட்டியதுடன் விறகு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புக்களுக்கு மாறவும் முயற்சித்திருந்தனர்.
இதற்கிடையில் அரச தலைவர் விசேட நிபுணர் குழுவை அமைந்திருந்த நிலையிலேயே இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும் இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதி வரை 847 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இந்த குழுவின் உறுப்பினரும், மேல் மாகாண பிரதி காவல்துறைமா அதிபருமான தேசபந்து தென்னக்கோன் நேற்று தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.