வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய அரசியல்வாதி
அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியொருவர் வெளிநாட்டின் புலனாய்வு அமைப்பிற்கு நாட்டை காட்டிக்கொடுத்தார் என அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு புலனாய்வு குழுவினருடன் இணைந்து செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு புலனாய்வாளர்களை பிரதமரின் அலுவலகம் வரை அழைத்துச்சென்றார் என தேசிய புலனாய்வுபிரிவின் தலைவர் மைக்பேர்கெஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரையோ அல்லது அவர் எந்த நாட்டின் சார்பில் பணியாற்றினார் என்பதையோ வெளியிடாத புலனாய்வு பிரிவின் தலைவர் பல வருடங்களிற்கு முன்னர் இது இடம்பெற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவுகஸ் உடன்படிக்கை
தற்போது கலைக்கப்பட்டுள்ள குழு ஒரு ஆக்ரோசமான மற்றும் அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பாகும் என தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் இது அவுஸ்திரேலியாவை முன்னுரிமைக்குரிய இலக்காக கொண்டுசெயற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் உள்ளுர் அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு போர்வையில் செயற்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புலனாய்வாளர்கள் சமூகத்தின் பல தரப்பட்டவர்களை இலக்குவைத்ததுடன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றிற்கு இடையிலான அவுகஸ் உடன்படிக்கை அவர்களின் முக்கிய ஆர்வத்திற்குரிய விடயமாக காணப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் அரசியல்வாதி
இந்தநிலையில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் பிடிக்குள் சிக்குண்டு அவர்களிற்காக செயற்பட்டவர்களில் முன்னாள் அரசியல்வாதியே முக்கியமானவர் என மைக்பேர்கெஸ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கத்தின் நலன்களை முன்னெடுப்பதற்காக முன்னாள் அரசியல்வாதி நாட்டை, கட்சியை, நண்பர்களை விற்றார் என அவர் கூறினார்.
ஒருகட்டத்தில் அந்த அரசியல்வாதி பிரதமரின் குடும்பத்தவர்களை வெளிநாட்டு புலனாய்வுபிரிவினரின் வட்டத்திற்குள் கொண்டுவர முயன்றார் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |