தமிழர் இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது! அவுஸ்திரேலியா செனட்டர் ஆதங்கம்
தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய செனட் சபையில் உரையாற்றிய David Shoebridge, ஆயுத மோதலின் இறுதி கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடூர குற்றங்களை உலகம் நினைவுகூர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மண்டலம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் சுமார் 3 இலட்சம் மக்கள் அடைக்கப்பட்டு, தொடர்ந்து குண்டுவீச்சுகளுக்கும் பீரங்கித் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர் என்று அவர் செனட் சபையில் குறிப்பிட்டார்.
மேலும், “தமிழர் இனப்படுகொலை என்பது 2009 ஆம் ஆண்டில் ஒரே நாளில் நடந்த சம்பவமல்ல. அது பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததுடன், இன்றும் அதன் விளைவுகள் தொடர்கின்றன.
முள்ளிவாய்க்கால் படுகொலை
முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று இந்த ஆண்டுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்தப் படுகொலையின் போது சுமார் 169,769 தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆயுத மோதலின் இறுதி மாதங்களில், தமிழர்களுக்கு எதிராக சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமலாக்கங்கள், தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவல்கள், சித்திரவதை, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை மறுத்தல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி, வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலும் உலக நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களாலும் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |