மட்டக்களப்பில் ஆரம்பமாகியது கரிநாள் போராட்டம்! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் (நேரலை)
புதிய இணைப்பு
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் கரிநாள் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், வேலன்சுவாமிகள் உட்பட பல சமூக செயற்பாட்டாளகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த போராட்டத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கரிநாள் பேரணியை தடுக்கும் முகமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு புனித செபஸ்தியார் ஆலயத்தை சுற்றி போராட்டக்காரர்களும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்களும் குவிந்துள்ள நிலையில் அவர்களை தடுக்க காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் வருகைதந்துள்ளார்.
தடை உத்தரவுகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (04.02.2024) இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் காவல்துறையினரால் இரவோடு இரவாக தடை உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு சிறு சமூக உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இவ்வாறான தடை உத்தரவுகளை காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.
இந்தநிலையில், போராட்டத்தை அடக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதுடன், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.