துண்டு துண்டாக சிதறிய அமெரிக்க பாலம்..! 3 நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலங்கள்
அமெரிக்காவில் பால்டிமோா் நகர இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் நீரில் மூழ்கியவர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மேரிலாண்ட் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்டிமோா் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 2.6 கி.மீ. நீளமான இரும்புப் பாலமானது, அந்த நகர துறைமுகத்தின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது.
இந்த நிலையில், கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டாலி’ என்ற சரக்குக் கப்பல் கடந்த செவ்வாயன்று அதிகாலை வேளை கடந்து சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தூணில் மோதியது.
இருவரின் உடல்
இதனால் இடிந்து விழுந்து பாலத்தில் சென்றுகொண்டிருந்த 7 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. சம்பவத்தின்போது பாலத்தில் சாலையைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்த மெக்ஸிகோ நாட்டுப் பணியாளா்களில் 2 போ் மட்டுமே மீட்கப்பட்டனா்.
மற்ற 6 பேரைத் தேடும் பணி கடந்த 24 மணிநேரம்வரை நீடித்த நிலையில், நீரின் தட்பவெப்ப நிலை உள்பட பல்வேறு காரணங்களால் பணியாளா்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்து மீட்புப் பணிகளை அமெரிக்க கடலோரக் காவல்படை நேற்றைய தினம் (27) மாலை கைவிட்டது.
இந்த நிலையில், நீரில் மூழ்கிய டிராக்டரில் இருந்து இருவரின் உடல் மீட்கப்பட்டதாக மேரிலாண்ட் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாராட்டு தெரிவித்தார்
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட அந்தக் கப்பலில் பணியிலிருந்த 22 மாலுமிகளும் இந்தியா்கள் ஆவா். பாலத்தில் மோதுவதற்கு முன்னரே, கப்பலில் நிலவிய மின் பிரச்சினை காரணமாக கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும் பாலத்தின் மீது கப்பல் மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் உள்ளூா் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் மாலுமிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இதனைத் தொடா்ந்து, பாலத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், இந்தச் சம்பவத்தின் மிகப் பெரிய உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய மாலுமிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |