இலங்கைக்கு வருகிறார் பான் கீ மூன்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை வரும் பான் கீ மூன், காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பாக காலநிலை மாற்றம் குறித்த அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தெரிவிக்கையில்,
ஒன்றிணைந்து செயற்பாடு
தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவுள்ளார்.
எனவே அவரது வருகையின் போது பல பசுமை பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இறுதிப்போரின்போது
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது இலங்கைக்கு வருகை தந்த பான் கீ மூன், போர் நடைபெற்ற இடங்களை உலங்கு வானூர்தியில் பார்வையிட்டதுடன் வவுனியாவில் கம்பி வேலிகளுக்கு பின்னால் இருந்த தமிழ் மக்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

