கொலைகாரர்கள் ஆவதற்கு நாம் தயார் இல்லை - அரசாங்கம் திட்டவட்டம்
புறக்கோட்டை மொத்த விற்பனை நிறுத்தப்படும் பட்சத்தில் முழு நாடும் சாகும் - கொலைகாரர்களாவதற்கு நாம் தயார் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில், சுய தனிமைப்படுத்தலில் இருக்க அனைவருக்கும் உரிமை உள்ளதாக கூறியுள்ள அவர், கொழும்பு - புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களை மூடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவது இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று புறக்கோட்டைக்கு விஜயம் மேற்கொண்ட வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மொத்த விற்பனை நிலையங்களின் வியாபார நடவடிக்கைகளை பார்வையிட்டார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர்,
சுய தனிமைப்படுத்தலுக்கு செல்வதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. அதில் பிரச்சினையில்லை. அனைத்து சில்லறை கடைகளையும் மூடினாலும் பிரச்சினையில்லை. கூட்டுறவு மற்றும் சதொச நிறுவனங்களை நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன.
ஆகவே விரும்பினால் அவர்கள் கடைகளை மூடலாம் - பலவந்தமாக கடைகளை திறக்குமாறு நாம் வலியுறுத்தப்போவது இல்லை. புறக்கோட்டையில் உள்ள வர்த்தகர்களும் விரும்பினால் சுய தனிமைப்படுத்தலுக்குச் செல்லலாம்.
ஏற்றுமதி இறக்குமதி இல்லையெனினும் பொருட்களின் விலைகள் தாமாகவே அதிகரிக்கும் அந்தச் சுமையை மக்களே எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
நாங்கள் முழு கடைகளையும் மூடி கொலைகாரர்களாவதற்கு இடமளிக்கப்போவது இல்லை.
அத்தியாவசிய சேவையாக மொத்த விற்பனையை நாம் கருதுகின்றோம் என்றார்.