ஹசீனா விவகாரத்தில் இந்தியாவுக்குப் புதிய அழுத்தம்!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை விசாரணைக்காக இந்தியாவில் இருந்து மீண்டும் வங்கதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டின் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள வங்கதேச தேசியவாத கட்சி (BNP) வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு மாணவர் போராட்டங்கள் காரணமாக ஆட்சி கவிழ்ந்த நிலையில், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
அதன் பின்னர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை ஈட்டியுள்ளது.
முறையான விசாரணை
அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாட்டின் புதிய பிரதமராக அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், ஷேக் ஹசீனாவை முறையான விசாரணைக்கு உட்படுத்த இந்தியா அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் எனத் தமது கட்சி முறைப்படி வலியுறுத்தும் என BNP-இன் மூத்த தலைவர் சலாவுதீன் அகமது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது குறித்து வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்படி அவரை நாடு கடத்துமாறு இந்தியாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும், இது இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையேயான விவகாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் சுமுகமான மற்றும் நட்புறவான உறவையே வங்கதேசம் விரும்புவதாகவும், அதேநேரம் விசாரணையை எதிர்கொள்ள ஷேக் ஹசீனாவைத் திருப்பி அனுப்புவது அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |