ரணிலுக்கு வாய்ப்பை மறுத்த பெரமுன - அதிபர் வேட்பாளராக களமிறங்கும் பசில்!
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பனர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.
அதிபர் வேட்பாளராக ரணில்

அதிபரின் தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம்.
சுகாதாரத்துறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அமைச்சர் பொறுப்புக் கூற வேண்டிய தேவையில்லை. அவ்வாறான வழிமுறை ஏதும் கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க எவ்வித தீர்மானங்களும் இதுவரை எட்டப்படவில்லை.
பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை களமிறக்கும் நிலைப்பாடு எமக்கு கிடையாது. அரசியல் அனுபவமற்றவர்களே அவரை களமிறக்குவதாக குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் அவள் சுட்டிக்காட்டியுள்ளார்.