தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : பசிலுக்கு பிடிக்கும், நாமலுக்கு பிடிக்காது
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு மொட்டுவின் ஆதரவை வழங்குவதற்கு மொட்டுவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அதிக விருப்பத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் மொட்டுவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இந்த தீர்மானத்தில் மகிழ்ச்சியடையவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பசிலிடம் ரணில் தெரிவித்த விடயம்
எதிர்வரும் அதிபர் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என அதிபர் விக்ரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஆனால் நாமல் ராஜபக்சவின் கருத்து காரணமாக அதிபர் தேர்தல் அறிவிக்கப்படும் வரை உத்தியோகபூர்வ ஆதரவை வெளியிடுவதில்லை என பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
எஞ்சியவர்களும் சென்றுவிடுவார்கள்
விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளித்தால் எஞ்சியுள்ள கட்சி ஆதரவாளர்களும் கட்சியை விட்டு வெளியேறிவிடுவர் என நாமல் ராஜபக்ச கட்சிக்குள் தெரிவித்துள்ளார்.
ஆனால், இம்முறை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி முன்வைக்கக் கூடாது என அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் நாமல் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |