பசிலுக்கு எதிராக போர்க்கொடி
பசில் ராஜபக்ஷவினால் இந்த நாட்டில் அமைச்சுப் பதவியை மட்டுமல்ல, அரச பணியில் கூட ஈடுபட முடியாது என்கிறார் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe).
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதில் பிரதமராக நியமிக்கும் முயற்சிகள் அரசாங்கத்திற்குள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் சட்ட அங்கீகாரம் குறித்தும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து மேலும் கூறிய அவர்,
“அரசியல் அமைப்பில் 19 ஆம் திருத்த சட்டத்தை நீக்கி 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்தவுடன் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என இவர்கள் நம்புகின்றனர்.
ஆனால் 1948 ஆம் ஆண்டில் டி.எஸ்.சேனாநாயகவினால் கொண்டவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அதுதான் செல்லுபடியாகும் சட்டமாகும்.
ஆகவே இதற்கு அமைய, பசில் ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டில் சாதாரண அரச பணியாளராகக் கூட சேவைசெய்ய முடியாது. அதற்கு இலங்கை சட்டத்தில் இடமும் இல்லை. அவரின் எந்தவொரு பதவியும் செல்லுபடியாகாது.
இந்த விவகாரம் குறித்து நான் வழக்கொன்று தொடுத்துள்ளேன். ஜனவரி 12 ஆம் திகதி இது விசாரணைக்கு எடுக்கப்படும்.
ஆகவே சாதாரண அரச பணியில் கூட ஈடுபட முடியாத ஒரு நபரை அமைச்சராக நியமிப்பதோ அல்லது பிரதமராக்குவதோ நாட்டின் சட்டத்திற்கு அமைய முரணானது. சட்ட முரணான செயற்பாடுகளையே இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.