பசில் விடுத்த அழைப்பை நிராகரித்த ஜி.எல். பீரிஸ்!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச விடுத்த அழைப்பை கட்சியின் தவிசாளரான ஜி.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஊடாக சிறிலங்காவின் அதிபரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுன அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் எதிர்த்தரப்பு வேட்பாளரான பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.
அதேவேளை, அதிபர் ரணிலால் நடைமுறைப்படுத்தபட்ட அவசரகாலச் சட்டத்துக்கும் எதிராக அவர் வாக்களித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை
இவ்வாறான காரணிகளால் ஜி.எல்.பீரிஸுக்குக் கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்குமாறும், கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து அவரை நீக்குமாறும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய பதவிகளை மறுசீரமைக்க கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடவேஹா, சன்ன ஜயசுமன, டிலான் பெரேரா உட்பட பொதுஜன பெரமுனவின் 10 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனித்துச் செயற்படும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
பசிலின் அழைப்பு
இந்நிலையில், பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைந்து செயற்படுமாறு பசில் ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் பசில் விடுத்த அழைப்பை நிராகரித்த ஜி.எல். பீரிஸ் தனது தரப்பினருடன் கலந்தாலோசித்து ஒரு
தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக பசில் ராஜபக்சவிடம் அவர் தெரிவித்துள்ளார்.
