நாடு திரும்பும் கோட்டாபயவிற்கு பாதுகாப்பு - ரணிலை திடீரென சந்தித்த பசில்
கோட்டாபயவிற்கு பாதுகாப்பு
தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
சாகர காரியவசம் வெளியிட்ட தகவல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிபருக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்கு பூரண ஆதரவு
இதன்போது கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை கட்டியெழுப்ப அதிபர் ரணிலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் அதிபர்கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இடம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதிபரிடம் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான கோரிக்கை இதுவெனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் பொதுஜன பெரமுன சார்பில் பிரசன்ன ரணதுங்க, சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதிபர் ரணிலுடன் சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, ருவான் விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.