இராஜதந்திர மார்க்கமாக நாடு திரும்பும் கோட்டாபய..! வெளியான தகவல்
மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியின் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை
கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர் இராஜதந்திர மார்க்கமாக நாடு திரும்புவார் எனவும் கூறினார்.
அவர் இலங்கையின் குடிமகன், அவர் விரும்பியவாறு பயணம் செய்யலாம்" என்றும் அலி சப்ரி கூறினார்.
24 ஆம் திகதி நாடு திரும்புவார்
கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து இலங்கையில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு வழியாக சிங்கப்பூரை சென்றடைந்தார்.
இதேவேளை, அவர் கடந்த 11 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றிருந்தார்.
முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்ச இராஜதந்திர கடவுச்சீட்டைக் கொண்டுள்ளதால், 90 நாட்கள் வரை தாய்லாந்தில் அவருக்கு தங்கியிருக்க முடியுமென தாய்லாந்து பிரதமர் முன்னதாக தெரிவித்தார்.
இந்நிலையில், தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியுள்ள கோட்டாபய, எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்புவார் என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.