சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பசிலின் வழக்குக் கோவைகள் : வெளியான தகவல்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிரான விசாரணைகள் தொடர்பான வழக்குக் கோவைகள் மற்றும் ஆவணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், நிலுவையில் உள்ள விசாரணைகள் தொடர்பில் சர்வதேச கைது பிடியாணையினைப் பெறுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்குக் கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

அத்துடன், பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நீதவான் கட்டளையிட்டார்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கருத்துக்களைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |