அரசுடமையாகிறது பசிலின் பிணை பணம் : சிறைக்கு செல்லப்போகும் பிணைதாரர்கள்
சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி மாத்தறைப் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச செலுத்தியிருந்த பிணைப்பணத்தை அரசுடமையாக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டது.
மாத்தறை, எலியகந்த வீதியில், பிரவுன்ஹில்லில் அமைந்துள்ள ஒரு சொத்து தொடர்பாக காவல்தறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிறைக்கு செல்லப்போகும் பசிலின் பிணைதாரர்கள்
இந்த வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ச, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையைக் கூட சமர்ப்பிக்காமல் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவருக்காகப் பிணைதாரர்களாகக் கையெழுத்திட்ட மூன்று பேருக்கும் நீதவான் அபராதம் விதித்ததுடன், குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
நீடிக்கப்பட்ட பிடியாணை
இது தவிர, பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது பிடியாணையை 2026 ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். அத்துடன், முறைப்பாடு சார்பில் FCID அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உட்பட சட்டத்தரணிகள் குழுவும் முன்னிலையாகினர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |