பஸில் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றுக்கு வருகை தருவது தொடர்பில் ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தெஹிவளை அண்டர்சன் சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிதா பண்டார தென்னக்கூன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின்போது பஸில் ராஜபக்ச கண்டிப்பாக நாடாளுமன்றம் வருகை தர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி பசில் ராஜபக்ஷ 8 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்றும் அவர் சார்பாக தேசிய பட்டியல் எம்.பி. டொக்டர் ரஞ்சித் பண்டாரா பதவி விலகுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், அவர் கொள்கை திட்டமிடல், நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும், ரஞ்சித் பண்டாராவுக்கு அமைச்சின் செயலாளர் பதவியை வழங்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவது குறித்து எதிர்க்கட்சி கூறுகையில், பசில் வந்தாலும் அவரால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க முடியாது எனத்தெரிவித்துள்ளது.