மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி கறுப்புப்பட்டி போராட்டம்.
மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கறுப்பு ஜனவரியை அனுஸ்டிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஊடக அமைப்புகள் இன்றைய தினம் (27) போராட்டங்களையும், அனுஸ்டிப்பு நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பிலும் ஊடக அமைப்புகளின் ஏற்பாட்டில் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்
இதன்போது கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து, ஊடக அடக்கு முறையை நிறுத்து, ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்தவிடப்படும் அச்சுறுத்தல்களை நிறுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறு தலையில் கறுப்புப் பட்டி அணிந்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், அருட்தந்தை ஜீவராஜ் அடிகளார், முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் இராஜேந்திரன், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் உதயரூபன், உட்பட ஊடகவியலாளர்கள் , சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |