தமிழருக்கான உரிமைகளை வென்றெடுக்க சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி சர்வதேசத்திற்கு அறைகூவல்!
மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து ஆரம்பமானது.
சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கிலிருந்து கிழக்க நோக்கிய பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகிம்சைப் போராட்டம்

அதனடிப்படையில், இன்று காலை மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் அகிம்சை வழி ஆர்ப்பாட்டம் தந்தை செல்வாவின் நினைவிடத்திலிருந்து ஆரம்பமாகி ஆரம்பமாகி மட்டக்களப்பு கல்லடி பாலம் வரை சென்று, அங்கு பாலத்தின் இரு மருங்கிலும் மக்கள் ஒன்று கூடி நின்று அமைதியான முறையில், சுதந்திர தினத்திற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
1948 ஆம் ஆண்டு பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றிருந்தாலும், அது பெரும்பான்மை சமூகத்திற்கே உரிய ஒரு சுதந்திர தினமாகவே இருக்கின்றது.
சர்வதேசத்திற்கு அறை கூவல்

இலங்கையில் வாழும் தமிழருக்கு 75 வருடங்களாக சுதந்திரம் கிடைக்காது உரிமைகள் மறுக்கப்பட்டு, இன ரீதியான புறக்கணிப்புக்களும் அடக்கு முறைகளுமே தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் தமக்கான சுதந்திரம் கிடைக்கும் வரை சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழருக்கு இல்லை என்று தெரிவித்து சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகம் எங்கும் மாணவர் ஒன்றியத்தினராலும் சமூக அமைப்புக்களாலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உரிமைப் போராட்டம்

தமிழருக்கான நீதி இது வரை கிடைக்கவில்லை என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில், தமிழர் தாயகம் எங்கும் உரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.







