முள்கம்பிகளை ஆற்றில் வீசி மீனவர்களுக்கு சதி!
ஓட்டமாவடி ஆற்றினை ஜீவனோபாய தொழிலான மீன்பிடித் தொழிலை நம்பி நாற்பத்தெட்டு மீனவர்கள் தங்களது தொழிலினை நாளாந்தம் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களது தொழில்கள் அண்மைக்காலமாக பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தொடர்ச்சியாக மீன் தொழிலை மேற்கொள்ளாத வகையில் பல்வேறு சதித்திட்டங்கள் இடம்பெற்று வருவதாக ஓட்டமாவடி மூன்றாம் வட்டார மின்னத் மீன்பிடி சங்கத் தலைவர் ஏ.ஏ.சலீம் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஓட்டமாவடி மீனவர்கள் மீராவோடை தொடக்கம் ஓட்டமாவடி பாலத்தை தாண்டி தியாவட்டவான் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது அந்த பகுதியிலுள்ள ஆற்றில் சிலர் முள்கம்பிகளை போட்டுள்ளதுடன், மண் மூடைகள் மற்றும் கழிவுகளையும் வீசியுள்ளனர்.
இதன் காரணமாக மீனவர்களின் மீன்பிடி தொழிலானது பாரிய இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது. மீனவர்கள் ஆற்றில் வலை வீசும் போது முள்கம்பிகளில் வலைகள் சிக்கிக் கொள்ளும் போது வலையை மீட்க வலையை கத்தியால் வெட்டி வலையை பெற வேண்டியுள்ளது. இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான எங்களது வலைகள் தொடர்ச்சியாக சேதமடைந்து செல்கின்றது.
இதனால் எங்கள் குடும்ப வருமானம் பின்னோக்கி செல்கின்றது. குறிப்பாக மீனவர்கள் காலை மற்றும் இரவு வேளைகளில் மீன் பிடித் தொழிலை மேற்கொள்ளும் போது துரதிஸ்ட வசமாக முள்கம்பிகள் மற்றும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் பொருட்களில் சிக்கிக் கொள்ளும் வலைகளை மீட்பதற்கு ஆற்றில் குதித்து வலையை எடுக்க முற்படும் சமயத்தில் மீனவர்களுக்கு கம்பிகள் மற்றும் கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் கை, கால் மற்றும் உடல்களை கிழித்து காயங்கள் ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் ஆற்றில் தொழிலுக்கு செல்லும் போது கழுத்தினை கிழித்தால் உயிர் போகும் நிலைமையும் உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக மீனவ சங்கத் தலைவர் ஏ.ஏ.சலீம் தெரிவித்தார்.
எமது மீன்பிடி வலைகள் சேதமாக்கப்படுவதால் அதனை சரி செய்வதற்கு இரண்டு நாட்கள் தேவைப்படுகின்றது. இதனால் எங்கள் தொழில் முற்றாக பாதிக்கப்படுவதுடன் குடும்பத்தினை வழி நடத்துவதில் பாரிய சிக்கல்கள் தோன்றுவதுடன் சில தினங்களில் பட்டினியினாலேயே காலம் கழிகின்றது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் குப்பைகள் பெரும்பாலும் ஆற்றில் கொட்டப்படுவதாகவும், இதனால் ஆறு முற்றாக பாதிக்கப்படுவதாகவும், வலை வீசும் போது வலையில் மீன்கள் வருவதில்லை, பொலித்தீன் கழிவுகள் தான் அதிகம் வருகின்றது என்று மீனவ சங்க செயலாளர் எம்.எம்.இஸ்மாயில் கவலை தெரிவித்தார்.
எனவே ஆற்றில் போடப்படும் முள்கம்பிகள், கழிவுகள், மண் மூடைகள் போன்ற பொருட்களை ஆற்றில் போடுவதனால் வலைகள் சேதமடைந்த நிலையிலும், மீனவர்களின் தொழில்கள் தொடர்ந்தும் பாதிப்படைந்து காணப்படும் நிலையில், கழிவுகளை ஆற்றில் போடாது தடுப்பதுடன் மீனவர்களின் தொழிலை திறம்பட மேற்கொள்ளும் வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




