“பற்றிக்கலோ கம்பஸ்”தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்
பற்றிக்கலோ கம்பஸ் தொடர்பில் இரண்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி முதலாவது தீர்மானம் அதனை கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் கீழ் பராமரிப்பது. இரண்டாவது தீர்மானம் அதனை அரச பல்கலைக்கழகமாக மற்றியமைப்பது ஆகும்.
இந்த இரண்டு தீர்மானங்களும் பரிசீலனையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை தற்போதுள்ள பற்றிக்கலோ கம்பஸின் ஊடாக, மாணவர்களுக்கு பட்டமளிப்பதற்கான அதிகாரத்தை, உயர்கல்வி அமைச்சோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ வழங்கவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
பற்றிக்கலோ கம்பஸில் உள்ள சில வளங்கள், பேராதனை பல்கலைக்கழகத்தில் கூட கிடையாது என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்திற்காக 30,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்ட போதிலும், இந்த ஆண்டு 41,500 மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது 16 பல்கலைக்கழகங்கள் காணப்படுவதாக கூறிய அவர், எதிர்வரும் மாதம் முதல் இது 17ஆக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த முறை கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திற்கு மேலதிகமாக 100 மாணவர்கள் வரை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் நலனுக்காக சிறந்ததொரு தீர்மானத்தை தாம் விரைவில் எடுக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.