ஆளுநர் பதவி பறிபோகிறதா - பதில் அளிக்கத் தடுமாறிய கிழக்கு மாகாண ஆளுநர்!
கிழக்கு மாகாணத்துக்கு புதியதொரு ஆளுநரை நியமிக்க போவதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக செந்தில் தொண்டமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் உறுதிப்படுத்தப்படாத செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் தற்போதைய ஆளுநர் அனுராதா ஜகம்பத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பி போது சரியான முறையில் பதிலளிக்காது மழுப்பும் வகையில் பதிலளித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலயம் கடந்த 30வருடகாலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த நிலையில், இன்று மும்மொழி பாடசாலையாக திறந்துவைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது பதிலளிக்கத் தடுமாறியுள்ளார்.
தடுமாறிய ஆளுநர்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கேள்வி - கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநராக நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்த சில செயற்பாடுகள் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் உங்களுக்கு எதிராக பெரும் விமர்சனம் இருந்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக தங்களது எதிர்ப்பை வெளியிட்டதன் காரணமாகத் தான் இந்த ஆளுநர் பதவியில் மாற்றம் ஏற்பட்டது என அறியப்படுகிறது. இது தொடர்பில் உங்களது கருத்து என்ன?
பதில் - என்னை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தது சிறிலங்கா அதிபர், அதே நேரத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதும் அதிபர் தான் ஆகவே அது அவரது முடிவு அவருக்கு அந்த அதிகாரம் இருக்கின்றது.
கேள்வி - மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக பத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளன இதற்கு உங்களது பதில் என்ன?
பதில் - இந்தப் பிரச்சினை வருட கணக்காக இருக்கின்ற ஒரு பிரச்சனை உண்மையிலேயே 100 அல்லது 200க்கும் மேற்பட்ட கால்நடைகளை வைத்திருப்பவர்களுக்கு இது பிரச்சினையாகத்தான் இருக்கின்றது.
தங்களது கால்நடைகளை பாதுகாக்க தெரியாதவர்களினால் தான் இந்த பிரச்சனை வருகின்றது. அந்தப் பிரதேசத்தில் சிலர் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இவர்கள் 200க்கும் அதிகமான கால்நடைகளை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்து விடுகிறார்கள். இதனால் தான் இந்த பிரச்சனை உருவாகி இருக்கின்றது.
மேய்ச்சல் தரைக்கு தீர்வு
நாங்கள் ஒரு புதிய திட்டத்தின் ஊடாக விவசாயிகளையும் கால்நடைகளையும் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம். கால்நடைகள் வைத்திருப்பவர்கள் குறித்த கால்நடைகள் விவசாய நிலங்களுக்குள் செல்லாமல் வேலி அடைத்து பாதுகாக்கவும் அதற்கான உணவுகளை வெளியிடங்களில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து அதற்கு வழங்கக்கூடியவாறும் அந்த செயற்திட்டத்தை நாங்கள் உருவாக்கி இருந்தோம்.
ஆனால் பண்ணையாளர்கள் இது சம்பந்தமாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் கால்நடைகளுக்கு சரியான முறையில் நீர் வழங்குவதில்லை சாப்பாடுகள் வழங்குவதில்லை கட்டாக்காலியாக அவற்றினை பொது வெளியில் திறந்து விடுகின்றனர். இதனால் அங்கு விவசாய நடவடிக்கையிலும் பயிற்செய்கையிலும் ஈடுபடும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.
இந்த நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நாங்கள் பாரிய நடவடிக்கைகளை திணைக்களங்கள் ஊடாக நடைமுறைப்படுத்த நினைக்கின்றோம். இந்த பயிற்செய்கைக்காக அவர்களுக்கு மில்லியனுக்கும் அதிகமான பணங்களை நாங்கள் வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் நாட்டின் அபிவிருத்திக்கும் ஏற்ற நடைமுறைகளை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம் .
ஆனால் இந்த 200, 300 மாடுகளை வைத்திருப்பவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்களது கால்நடைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் ஒரு பண்ணையை அமைத்து அந்த பண்ணைக்குள் கால்நடைகளை அடைத்து பராமரித்து அதன் மூலம் இலாபம் அடைய முயற்சிக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு பண்ணை
அவர்கள் இலாபம் அடைவதற்கு மட்டும் தான் முயற்சிக்கின்றார்கள். கால்நடைகளை பாதுகாக்கவும் அதற்கான நல்லவிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர்கள் முனைவது இல்லை.
கேள்வி - மாதவனை மைலத்தமடு தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதற்கான நீதிமன்ற தடை உத்தரவும் இருக்கின்றது? கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதைக்கு பணம் கட்டுவது தொடர்பாக பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன இது சம்பந்தமா உங்களுக்கு கருத்து?
பதில் - இல்லை இல்லை எனக்கு தெரியாது அப்படி ஒன்றும் இல்லை. இது உண்மையிலேயே ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் என்று தான் நான் கூற வேண்டும். இன்று நாடு உள்ள பொருளாதார நெருக்கடியில் நாங்கள் ஒருவரிடம் துவிச் சக்கர வண்டிக்கு 20 ரூபாவும், மோட்டார் சைக்கிளுக்கு 40 ரூபாவும் தான் அறவிடுகின்றோம்.
இவ்வளவு காலமும் நாங்கள் இலவசமாக வழங்கிய சேவை, இன்று மாகாண சபைக்கு நிதி பற்றாக்குறை இருக்கின்றது என்பதால் கட்டணம் அறவிடுகின்றோம். 45 மில்லியன் ரூபாய் நிதி இதனால் செலவாகின்றது.
45 மில்லியன் தேவை
ஆகவே இன்றைய நிதி இல்லாத நிலையில் இந்த பாதைக்கு ஒரு சிறியதொரு பணத்தை அறவிடுவதை அரசியலாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றம் வரை சென்று இந்த விஷயத்தை அரசியலாகிக் கொண்டிருக்கின்றார்.
உண்மையிலே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். நாங்கள் கடந்த காலங்களில் இந்த பாதையை இலவசமாக வழங்கியிருந்தோம். பருவ சீட்டு கொடுத்திருந்தும் பல விடயங்கள் இலவசமாக வழங்கி இருந்தோம்.
ஆனால் இன்று நாட்டில் பணம் தேவை என்ற காரணத்தினால் நாங்கள் இந்த சிறியதொரு தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றோம். ஆகவே இதை அரசியல் ஆக்க வேண்டாம்.
ஏனென்றால் இன்று மாகாண சபைகளில் பணம் இல்லை. 45 மில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. பணம் இருந்தால் அந்த பணத்தை எங்களது மாகாணங்களுக்கு வழங்கிவிட்டு இலவசமாக இந்த பாதையில் செல்வதற்கு அனைவரும் ஒத்து வரவேண்டும்.
ஆகவே இந்த விடயங்களில் நாங்கள் சரியாக கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். ஆகவே இதை அரசியல் ஆக்க வேண்டாம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
