மட்டக்களப்பில் வீட்டை உடைத்து 8 பவுண் நகைள் கொள்ளை : சந்தேக நபர் கைது
(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகளை திருடிய ஊறணி பகுதியைச் சோந்த 56 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடமிருந்து தங்க நகைகளையும் மீட்டுள்ளதாக மட்டு தலைமையக காவல் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர்கள் கடந்த 14ஆம் திகதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
சிசிரிவி கமராவில் கண்டுபிடிப்பு
இந்த நிலையில் பூட்டியிருந்த வீட்டின் மதில் மீது ஏறி குதித்த சந்தேகநபர் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த மோதிரம், காப்பு, தோடு சங்கிலி உள்ளிட்ட 8 பவுன் தங்கம் மற்றும் கவரிங் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

இதையடுத்து காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மட்டு தலைமையக காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான காவல் குழுவினர் வீட்டில் பொருத்தியிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகிய காணொளி காட்சியை கொண்டு விசாரணையினை மேற்கொண்டனர்.
இதன்போது ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரை கைது செய்ததுடன் நகைகள் விற்பனை நிலையத்தில் விற்பனை செய்திருந்த நகைகள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களையு மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |