மட்டக்களப்பில் படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம்: விவசாயிகள் கவலை
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்கு 10 காட்டு யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காட்டு யானைகள் இன்று(7) காலைவேளையிலேயே வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விவசாயிகள் கவலை
அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற இந்நிலையில் இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கூட்டமாக போரதீவுப் பற்றுப் பிரசேத்தின் மட்டக்களப்பு வாவியை அண்மித்ததாகவுள்ள பற்றைக் காட்டுப்பகுதியில் இக்காட்டுயானைகள் தங்கியுள்ளததால் அப்பகுதியில் வேளாண்மை அறுவடை வேலைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் தொழிலாளர்களும் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே செயற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள்
மேலும் பெரியபோரதீவு, போவில்போரதீவு, பட்டாபுரம், பொறுகாமம், புன்னக்குளம், பழுகாமம், காந்திபுரம், உள்ளிட்ட பல கிராமங்களை அண்மித்தாக இவ்வாறு கூட்டமாக நிற்கும் காட்டு யானைகளை அப்புறப்படுத்துவதற்கு வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமங்களை அண்மித்து காட்டு யானைகூட்டம் நிற்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் யானைகளைப் பகல் வேளையில் அப்புறப்படுத்த முடியாது, அதனை இரவு வேளையிலேயே வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெல்லாவெளி காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மிக நீண்ட காலமாக போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் காட்டு யானைகளில் தொல்லைகளுக்கு அப்பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |