எம்.பி பிரபுவை தாக்க முயற்சி...! ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடும் கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் பிரபுவைத் தாக்க முற்பட்டதை ஈ.பி.டி.பி கட்சியின் மட்டு ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவில் அவரது காரியாலயத்தில் இன்று (08-06-2026) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அநாகரிகமான முறை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், "கடந்த வாரம் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா அநாகரிகமான முறையில் தாக்க முற்பட்ட சம்பவத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

கடந்த காலங்களில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இன முரண்பாடுகளைத் தோற்றுவித்து, அதன் மூலம் அரசியல் குளிர்காய்ந்து வந்தவர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா.
அவர் மீண்டும் மட்டக்களப்பில் தமிழ், முஸ்லிம்களுக்கு இடையே இன முரண்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்.
வழிபாட்டுத் தலம்
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அனுபவம் கொண்ட ஒருவராக இருந்துகொண்டு சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்க முற்பட்டதற்கு கந்தசாமி பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே காரணமாக அமைந்துள்ளது.
தனது இந்த அநாகரிகமான மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு முரணான செயலுக்காக ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடம் உடனடியாகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலமான ஓட்டமாவடி காளி கோவிலை இடித்து, அவ்விடத்தில் மீன் சந்தை அமைத்துத் தனது தேர்தல் மேடைகளில் பெருமையாகப் பேசியவர் ஹிஸ்புல்லா.
சட்டங்களை மதிக்காது காட்டுச் சட்டத்தைக் கையில் எடுத்த இவருக்கு இன்று சட்டங்களைப் பற்றிப் பேசுவதற்கு எந்தவொரு தார்மீகத் தகுதியும் கிடையாது.
பூர்வீகக் காணி
ஹிஸ்புல்லாவுக்குத் தீவிரவாத அமைப்புகளுடனும் சஹ்ரானுடனும் நெருங்கிய தொடர்பு இருந்ததை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த காலத்தில் பகிரங்கமாக ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.
ரிதிதென்னை பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் பூர்வீகக் காணிகளைத் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்கலைக்கழகம் அமைப்பற்குக் கையகப்படுத்தியுள்ளார்.

இந்தக் காணி அபகரிப்புகள் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்துக் கௌரவ ஜனாதிபதி அவர்கள் உடனடியாகத் தலையிட்டுத் துரித விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்