மட்டக்களப்பில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கண்டறிய நடமாடும் மருத்துவ பரிசோதனை திட்டம்
(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் அவ் வழியில் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி சாரதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் உபயோகித்து வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறிய மாவட்ட போக்குவரத்து பிரிவு காவல்துறை, தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்துடன் இணைந்து இந் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த நடவடிக்கை இன்று (11) மட்டு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் இடம்பெற்று வருவதாக மட்டு மாவட்ட போக்குவரத்து காவல் பிரிவு பொறுப்பதிகாரி காவல் பரிசோதகர் குணதிலக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பின் முக்கிய சந்திகள்
நாட்டில் தொடர்ந்து நாளுக்கு நாள் இடம்பெற்றுவரும் வீதி விபத்துக்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த வீதி விபத்துக்களை தடுப்பதற்கான விசேட திட்டத்தின் கீழ் மதுபோதை மற்றும் மதுபானங்கள் பாவித்துவிட்டு வாகனங்கள் செலுத்தும் சாரதிகளை கண்டறிய நடமாடும் மருத்துவ பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய மட்டக்களப்பு நகரில் முக்கிய சந்திகளில் போக்குவரத்து காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு மோட்டார் சைக்கிள்கள் தொடக்கம் கனரக வாகனம் வரை நிறுத்தி அதன் சாரதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் விசேட பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நடமாடும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் பேருந்தானது, மட்டு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தின் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்து, வான் சாரதிகள் கனரக வாகன மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உட்பட வாகனங்களை நிறுத்தி அதன் சாரதிகளுக்கு உடல்ரீதியான பரிசோதனைகளை நடத்தி அவர் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துள்ளாரா என கண்டறியப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |