அரசின் செயற்பாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள மைத்திரி தரப்பு
இலங்கையில் மீண்டும் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை அளிப்பதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஆங்கில மொழிக்கு முதன்மை இடத்தை வழங்க அரசாங்கம் முயற்சிப்பதால் விபரீத நிலைமையே ஏற்படுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற காலப்பகுதிக்குப் பின்னர் இருந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழிக்கு இருந்து வருகின்ற முதன்மை இடத்தை தற்போதைய கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கம் மாற்றியமைக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ஆங்கில மொழிக்கு முதன்மை இடத்தை வழங்க அரசாங்கம் முயற்சிப்பதால் விபரீத நிலைமையே ஏற்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். கண்டியில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறினார்.
மீண்டும் ஒருமுறை இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தி சுதந்திரத்திற்கு முன் இருந்த நிலைமையை ஏற்படுத்த சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் பாடசாலைகள் அரசாங்கத்திற்கு எடுக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இலவசக் கல்வி முறை மேலும் விரிவாக்கப்பட்டது.
நாட்டில் தற்போதாவாது முதன்முறையாக அரச இல்லாத தனியார் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு நிறுவனங்களாக இன்று அனைத்து இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வி விற்பனை செய்யப்படுகின்றது. அனைத்து நாடுகளிலும் தாய்மொழியே அடிப்படை மொழிமூலமாக கொள்ள வேண்டுமென யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
இப்படியிருக்க இந்தக் கொள்கைக்கு எதிராக தற்போதைய அரசாங்கத்திலுள்ளவர்கள் இன்று சூழ்ச்சி செய்து கல்வி முறையை மாற்றியமைக்கின்றனர். அதனால் கிராமப்புறங்களிலுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்லமுடியாத நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
அமரர் பண்டாரநாயக்க உயர்கல்வி அமைச்சு சட்டத்தை கொண்டுவந்தபோது கிராமப்புற மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றால் கிராமங்களில் தோட்ட வேலைகளை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என்று விமர்சித்தார்கள்.
இந்த நிலையில், மீண்டும் ஒருமுறை ஆங்கில மொழியை முதன்மைப்படுத்தும் வகையில் வர்த்தமானி ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளதால் ஏற்கனவே இருந்த விபரீத நிலைமை மீண்டும் ஏற்படலாம். இதற்கு எதிராக நாங்கள் செயற்பட வேண்டும்.
