"மயில் போல பொண்ணு ஒன்னு" பாடல் பாடி நல்லடக்கம் செய்யப்பட்ட பவதாரணி
இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தின் பண்ணைபுரத்தில் இளையராஜாவின் தாய் சின்னத்தாயி மற்றும் மனைவி ஜீவா ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பவதாரணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கல்லீரல் புற்றுநோய் காரணமாக கடந்த 25 ஆம் திகதி இலங்கையில் உயிரிழந்த இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் நேற்றைய தினம் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
திரையுலக பிரபலங்கள்
சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் உறவினர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தரப்பினர் உள்ளிட்ட பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தேனி மாவட்டத்தின் பண்ணை புரத்தில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் நினைவிடத்திற்கு இடையே, பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மயில் போல பொண்ணு ஒன்னு எனும் பாடல்
இதேவேளை, பவதாரணியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளின் போது அவரது உடலுக்கு பட்டுச் சேலை போர்த்தி, சகோதரர்களான கார்த்திக் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
அத்துடன், பவதாரணியின் உடலைச் சுற்றி, மயில் போல பொண்ணு ஒன்னு எனும் பாடலை பாடி குடும்பத்தார் உருகியது காண்போரை கண்கலங்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |