ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு தோல்வி: அதிர வைக்கும் சர்வதேச அறிக்கை
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்த வழக்கானது உண்மையில் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு இடம்பெறக்கூடாது அதற்கு உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய விசாரணை சார்ந்த தோல்விகளைக் கொண்ட ஒரு வழக்காகும் என அறிக்கையிடப்பட்டுள்ளது.
ரெட்ரெஸ் மற்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் இணைந்து வெளியிட்டுள்ள 70 பக்க விரிவான புதிய அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ‘இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்
2000 - 2010 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உள்நாட்டுப்போர் குறித்து செய்தியறிக்கையிட்டு வந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களின் சுமார் 44 பேர் கொல்லப்பட்டனர்.
இருப்பினும் இன்று வரை இப்படுகொலைகளுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளியும் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை’ என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் தொடரும் இத்தகைய தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கானது தமது உயிரைப் பயணம் வைத்து சுய தணிக்கை செய்து அல்லது வேறு நாடுகளில் வாழும் இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சுறுத்தலை விளைவித்திருப்பதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப் பாளர் யஸ்மின் சூக்கா விசனம் வெளியிட்டுள்ளனர்.
விசாரணை சார்ந்த தோல்வி
அதேபோன்று ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்த வழக்கானது உண்மையில் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு இடம்பெறக் கூடாதோ அதற்கு உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய விசாரணை சார்ந்த தோல்விகளைக் கொண்ட ஒரு வழக்காகும் என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமலராஜனின் கொலை இடம்பெற்ற இடம் ஒருபோதும் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை. படங்கள் எவையும் எடுக்கப்படவில்லை. தடயவியல் ஆதாரங்கள் எவையும் சேகரிக்கப்படவில்லை.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு கடமையில் இருந்த சில பாதுகாப்பு படையினரை விசாரிப்பதற்கு பல வருடங்கள் எடுத்து.
ஆனால் பலர் ஒருபோதும் அடையாளம் காணப்படவும் இல்லை. விசாரணைக்கு உட்படுத்தப்படவும் இல்லை என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
