பெல்லன்வில துப்பாக்கிச் சூடு சம்பவம்! தப்பியோட முயன்ற இரு சந்தேகநபர்கள் கைது
பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், தப்பிச் செல்ல முயன்ற வேளையில் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 37 வயதுடைய பக்மீன (Bakamuna) பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொரலஸ்கமுவ காவல் பிரிவுக்குட்பட்ட பெல்லன்வில பகுதியில் நேற்று (25-07-2026) இரவு துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட நாவகமுவ காவல் நிலைய உத்தியோகத்தர்கள் குழு, இரவே ரனல பகுதியில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களையும் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 6.6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவகமுவ காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |