இனிவரும் காலங்களில் அப்படி ஒன்றும் நடக்காது! உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் முக்கிய அறிவித்தல்
நாங்கள் எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76-வது பொது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமெரிக்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலகத்தின் முன்பு தற்போதுள்ள சவால்களுக்கு போர்கள் மூலம் தீர்வு காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தன்னையும் தனது கூட்டாளிகளையும் காப்பாற்ற வேண்டிய தேவையிருந்தால் போரை கடைசி ஆயுதமாகத்தான் அமெரிக்கா பயன்படுத்தும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை, அமைதிக்காக எந்த நாட்டுடன் இணைந்து செயல்படவும் தயார் எனவும் அறிவித்துள்ளார். கொரோனா போன்ற பெருந்தொற்றை வெடிகுண்டுகள் மூலம் தடுக்க முடியாது என்றும் அரசியல் மற்றும் அறிவியல் சார்ந்த கூட்டு முயற்சியே தேவை என்றும் பைடன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அதிகரிக்கப்படும் என்றும் பைடன் உறுதி அளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு 160 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்களை அனுப்பியுள்ளதாகவும் கொரோனா பரவலை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு 15 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அனுப்பியுள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.