சிறிலங்கா அரசாங்கத்திற்குள் பாரிய முரண்பாடு
அரசாங்கத்திற்குள் பாரிய முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) சூசகமாக தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் ஒருவருக்கு நாடாளுமன்றத்தின் ஆதரவு இல்லாத போது அவரால் முழுமையாக செயற்பட முடியாது என கொழும்பின் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இதன்போதும் மேலும் கருத்துரைத்த அவர்,
“அரசாங்கத்திற்கு ஒரு வருடமாக மேற்கொண்ட போராட்டத்தை வெற்றிகொள்ள முடியாத நிலையிலேயே இன்று வெளியில் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என்ன செய்வதென எனக்குத் தெரியவில்லை.
எமது தேர்தல் முறைமைக்கு அமைய நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மிகவும் பலம் வாய்ந்தது என அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் - ஆனால் அவ்வாறல்ல.
எமது நாட்டில் நாடாளுமன்றில் அதிக பெரும்பான்மையை கொண்டவரே இந்த நாட்டில் அதிகாரம் படைத்தவர். நிறைவேற்று அதிகாரம் படைத்தவர் அல்ல.
எனினும் பல சந்தர்பங்களில் எமது நாட்டின் சில அரச தலைவர்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை காணப்பட்டதோடு, நிறைவேற்று அதிகாரமும் காணப்பட்டது. ஆகவே மக்கள் நிறைவேற்று அதிகாரத்தை மிகவும் பலம்வாய்ந்த ஒன்றாக பார்த்தனர்.
2001ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார அரச தலைவராக சந்திரிக்கா செயற்படுகையில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற பலத்தை கைப்பற்றினார். நாட்டை அவரே ஆண்டார்.
2015ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் மைத்திரிபால சிறிசேனவிடம் காணப்பட்டது எனினும் பிரதமர் ரணிலே நாட்டை ஆண்டார். ஆகவே இன்றும் அதுவே நடைபெறுகின்றது என நினைக்கின்றேன்” என்றார்.
