இலங்கையை தாக்கவுள்ள மிகப்பெரிய நிலநடுக்கம் : பேராசிரியர் எச்சரிக்கை
மிகக் கிட்டிய காலத்தில் இலங்கை ஒரு மிகப்பெரியளவிலான நிலநடுக்க வாய்ப்பை கொண்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Piratheeparajah) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எண்ணுக்கணக்கான உயிர்களை பலியெடுக்கின்ற மிகப்பெரிய நிலநடுக்க நிகழ்வும் இடம்பெறும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்கு கீழாக அல்லது இலங்கையை அண்மித்திருக்கக்கூடிய இந்திய கவசத் தகட்டுடன் சேர்ந்த பகுதிகளில் மிகச்சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அண்மித்த காலத்தில் அதிக நிலநடுக்கங்கள் பதிவாகுவது என்பது என்றோ ஒரு நாள் பாரிய நிலநடுக்கம் ஏற்படும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
இலங்கையினுடைய வரலாற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடிய காலநிலை சார் அனர்த்தத்தில் இருந்து மக்கள் மீண்டு கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இன்னமும் மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இலங்கை இந்த அனர்த்தத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் முழுமையாக மீளுவதற்கு இன்னும் பல மாதங்கள் செல்லும் என்பது கசப்பான உண்மை. இன்னும் ஒருநாள் இந்தப் புயல் இலங்கையில் தங்கியிருந்தால் இன்று நடந்த பாதிப்புக்களின் 5 மடங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்த அனர்த்தம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் போதுமான எச்சரிக்கை விடுக்கவில்லை என்றே நானும் கருதுகின்றேன். எச்சரிக்கை விடுத்திருந்தால் பாதிப்புக்களை குறைத்திருக்க முடியும். இயற்கை அனர்த்தங்களை தடுக்க முடியாது எனினும் திணைக்களங்கள் இன்னமும் வினைத்திறனாக செயற்பட்டிருக்க வேண்டும்.
வடகீழ் பருவக்காற்றைப் பொறுத்த வரையில் ஜனவரி மாதம் இறுதி வரை வடக்கில் மழைக்கான சாத்தியம் காணப்படுகின்றது. வடகீழ் பருவக்காற்று முடிவடைவதற்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இந்தக் காலப்பகுதியில் சில காலங்களில் மிகக் கனமழையும், கனமழையும் மிதமான மழையும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
தற்போதைய வளிமண்டல நிலைமையின் படி அடுத்து வருகின்ற 15 நாட்களுக்கு இதேபோன்றதொரு புயல் உருவாவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் இந்த டிசம்பர் மாதம் முடிவடைவதற்குள் வங்காள விரிகுடாவில் இரண்டு காற்றுச்சுழற்சிகள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. இது மிகப் பெரியளவிலான மழையைத் தருமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.“ என தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனர்த்த நிலைமைகள், மீட்பு நடவடிக்கைகள், எதிர்கால அனர்த்தங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |