கொழும்பில் பாரிய போராட்டம்: குவிக்கப்பபட்ட காவல்துறையினர்!(படங்கள்)
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் உள்ள சந்தியில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்ககப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நேற்றைய தினம் குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்த நிலையில், ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பால் இன்றைய தினம் மற்றுமொரு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதிபர் ஆசிரியர்களின் சம்பன முரண்பாட்டை நிவர்த்தி செய், மாணவர்களின் இலவச கல்வி உரிமையை உறுதி செய், கல்விக்கான செலவை பெற்றோர் மீது திணிக்காதே போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சனைகளுக்கு தீர்வு
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களுக்கான போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, அவர்களது பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறும் கோரியுள்ளனர்.
அத்துடன், இந்த வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்க வேண்டாமென ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கோரியுள்ளார்.
நிதி ஒதுக்கீடு
கொழும்பின் புறநகரான வெல்லம்பிட்டிய, வேரகொட வித்தியாலயத்தில் அண்மையில் மதிலொன்று இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில், இவ்வாறான நிலையில் உள்ள பாடசாலைகளை புனரமைக்கும் பணிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பு கருதி குறித்த பகுதியில் சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதோடு, நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.