ராஜபக்சர்களுக்கு ஏற்படப்போகும் புதிய சிக்கல்: நஷ்ட ஈடு கோரி வழக்கு
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை நுகர்வோர் சங்கம் நஷ்டஈடு தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த சங்கத்தின் செயலாளர் மிலிந்த பிரேமரத்ன சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய நிர்வாகமும் அதிகாரிகளும் எடுத்த தவறான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்ட வல்லுநர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்ததோடு அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனவும் அவர்கள் கூறியிருந்தனர்.
நீதி வழங்காத அரசாங்கம்
மேலும் மிலிந்த பிரேமரத்ன, இந்த வழக்குகளை சிவில் வணிக நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றத்திற்கு ஒதுக்கலாம் என்று சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதோடு இந்த வழக்கு தொடர்பாக அகில இலங்கை நுகர்வோர் சங்கம் கலந்தாலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எரிவாயு விபத்தினால் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மனித மரணங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் இன்றும் அரசாங்கம் அதற்கு நீதி வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னைய ஆட்சிக் காலத்தில் எரிவாயு வெடிப்பு உட்பட பல்வேறு துறைகளில் பல பொருளாதார குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றிற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் எத்தகைய பலனையும் தரவில்லை எனவும் பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |