விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் சுமந்திரனின் கதி என்ன..!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தால் சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களினால் இன்று யாழ்ப்பாணம் சென்றிருக்க முடியுமா என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதியமைச்சர் வெட்கப்பட வேண்டுமென சுமந்திரன் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை சிறப்புரிமையை பயன்படுத்தி நாடாளுமன்றில் பிழையான தகவல்கள் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நீதி அமைச்சராக தாம் பதவி வகிப்பதற்கு வெட்கப்பட வேண்டும் என தம்மை சுமந்திரன் விமர்சித்துள்ளார்.
இதற்காக மூன்று காரணிகளை சுமந்திரன் முன் வைத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் சுமன தேரர் தமிழர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதாகவும், மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்க நீதிபதிகள் தடை உத்தரவை விதிப்பதாகவும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் சுமந்திரன் குற்றம் சுமத்தி இருந்தார்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிக்கின்றேன். நீதி அமைச்சர் என்ற வகையில் என்னால் கைது செய்ய முடியாது. அது காவல்துறையினரின் கடமையாகும்.
மாவீரர் தின நிகழ்வுகளில் நடத்த வேண்டாம் என நீதிபதிகளிலேயே யாரும் கூறவில்லை. அவர்கள் எடுக்கும் சுயாதீனமான தீர்மானமே அது மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கூறுகின்றார்.
சுமந்திரனை புலம்பெயர் தரப்பு ஒன்று படுகொலை செய்வதற்கு முயற்சித்தது. 20 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
சுமந்திரன் பெறுமதி 20 லட்சம்
சுமந்திரன் பெறுமதி 20 லட்சம் தானா என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புலனாய்வு பிரிவினரும் இராணுவத்தினரும் சிறந்த முறையில் செயற்பட்டு இந்த சூழ்ச்சியின் பின்னணியில் இருந்த ஐந்து தமிழ் இளைஞர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் சுமந்திரனுக்கு கொலை மிரட்டல் வரும்போது பயங்கரவாத சட்டம் சரியானது என்றும் ஏனைய கொலையாளிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தும் போது அது பிழையானது எனவும் எவ்வாறு கூற முடியும் என விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நாடாளுமன்றில் இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்க வேண்டாம் என கோரியுள்ளார்.