வட்டுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன்: கைது செய்யப்படாத சந்தேகநபர்
வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியிடமும் இளைஞரின் உயிரிழப்பின் போது கடமையிலிருந்த மேலும் 07 உத்தியோகத்தர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
குறித்த விசாரணைகளானது யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(05) மதியம் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் என்கின்ற 28 வயதான இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி விளக்கமறியலில் உயிரிழந்தார்.
வழக்கு விசாரணை
இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.
மேலும் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் கடந்த 24ஆம் திகதி, மன்றில் சாட்சியம் அளிக்கும் போது , தன்னையும் ,உயிரிழந்த மற்றைய இளைஞனையும் சித்திரவதைக்கு உட்படுத்திய காவல்துறையினரை அடையாளம் காட்ட முடியும் என கூறி , இருவரின் பெயர்களை கூறி அடையாளம் கூறியதுடன் , ஏனைய மூவர் தொடர்பில் அவர்களின் அங்க அடையாளங்களை கூறி அடையாளம் காட்டி இருந்தார்.
போராட்டம்
அதனை தொடர்ந்து , நான்கு காவல்துறை உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு , நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இளைஞன் சாட்சியம் கூறி 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஐந்தாவது சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
அதேவேளை உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி நேற்றைய தினம் வட்டுக்கோட்டை காவல் நிலையம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |