பொங்கு தமிழ்ப் பிரகடன அடிப்படையில் தமிழர் தாயக மீட்பு பேரணிக்கு வேலன் சுவாமிகள் அறைகூவல்!
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி ஆரம்பித்துள்ள பேரணி அறம் சார்ந்த அறவழி தமிழர் போராட்டம். இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்க அனைத்து தமிழர் தாயக உறவுகளும் அணிதிரண்டு தமிழர் தாயகம் வென்றெடுக்கம் இந்த அறவழிப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள் என தவத்திரு வேலன் சுவாமிகள் அனைவருக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகங்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் மற்றும் மதத்தலைவர்கள் என அனைத்து தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் 4ஆவது நாளும் இறுதி நாளுமான இன்றைய தினம் வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகியுள்ளது.
இறுதி நாள் பேரணி
இந்த பேரணி ஆரம்பிக்கும் போது ஆசியுரை வழங்கும் போதே அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய இந்த பேரணி முற்று முழுதாக அறம் சார்ந்ததும், அறத்தின் வழியான தமிழினத்தின் பயணம். தமிழர் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டதன் பின்னர், தயாக உரிமை கோரிய போராட்டங்கள், அறவழியாகவும், எழுச்சிப் போராட்டங்களாகவும், நினைவேந்தல்களாகவும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் போராட்டங்கள் பல்வேறு பரிணாமங்களில் முன்னெடுக்கப்பட்டன.
அதுமட்டுமன்றி தமிழர் தாயக உறவுகள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலே வாழும் உறவுகளாலும் இந்த எழுச்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வரலாற்றின் முக்கிய பதிவு
இவ்வாறான நீண்ட போராட்ட வரலாற்றைக்கொண்டுள்ள எமது இனத்தின் தாயக உரிமைப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியானது, ஈழத்தமிழினத்தின் தாயக விடுதலை வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்றைப்பதிந்துள்ளது.
இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெரும் மக்கள் எழுச்சியாக இடம்பெறவுள்ளது. அதற்காக இன்று வெருகல் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி மிக எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு தமிழர் தாயக இணைப்பு என்பது நிரந்தரமானது. தமிழனம் பூகோள அரசியலில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நோக்கோடு இந்த எழுச்சி பேரணியை ஆரம்பித்துள்ளோம்.
தமிழர் நிலங்களில் குடியேறி இருப்பை உறுதிப்படுத்தல்
இந்த எழுச்சி பேரணி மூலம் சர்வதேச இராஜதந்திரிகளுடனான பேச்சுக்களையும், எமது மக்கள் மத்தியில் முனெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களையும், தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.
இதேவேளை தமிழினத்தின் சனத்தொகை பெருக்கப்பட வேண்டும், எங்கெல்லாம் எமது நிலங்கள் வீணாக கிடக்கின்றதோ அவற்றையெல்லாம் எமது மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
அவர்கள் அங்கு குடியேறி எமது இனத்தின் தொடர்ச்சியை, இனத்தின் பரம்பலை, இனத்தின் எழுச்சியை நிலை நாட்ட வேண்டும் என்ற அனுபவத்தை இந்த எழுச்சி பேரணி தந்துகொண்டிருக்கின்றது.
பொங்கு தமிழ் பிரகடன அடிப்படை
அந்த வகையில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் அடிப்படையில், மரபு வழித் தாயகம், தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
ஆகவே எமது அடிப்படைக் கோரிக்கைளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பேரணிக்கு அனைத்து தாயக உறவுகளும் உணர்வுபூவமாக கலந்துகொண்டு மேலும் வலுச்சேர்க்கு வகையில் தமது பிரதேசங்களுக்கு பேரணி வரும் போது, அதில் கலந்து கொண்டு தாயக உரிமைய வென்றெடுக்க பேராட வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.