கறுப்பு ஜுலை இனவழிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
கறுப்பு ஜுலை இனவழிப்பின் போது சிறைச்சாலையில் வைத்து அரசியல் கைதிகளான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
இந்த நினைவேந்தல் நிகழ்வின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கையில் ஜ.நா வின் கண்காணிப்பின் கீழ் சுதந்திரத்திற்கான பொது சன வாக்கெடுப்பை சர்வதேசம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
53 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி 35 தமிழ் அரசியல் கைதிகளும் 27 ஆம் திகதி 18 தமிழ் அரசியல் கைதிகளுமாக மொத்தம் 53 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி மற்றும் ஜெகன் உள்ளிட்டவர்கள் அடங்கியிருந்தனர், அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வானது தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று (25) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது.
அக வணகம் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 பேருடன் தமிழர்களின் இனவிடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த வீர மறவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக அக வணகம் செலுத்தப்பட்டது.
"இனப்படுகொலை இடம்பெற்று 40 ஆண்டுகள் கடந்தாலும் பேரினவாத அரசால் நீதி கிடைக்காது" என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இதன் போது கருத்து வெளியிட்டிருந்தார்.