பேரிடரில் நேர்ந்த துயரம்: மல்வத்து ஓயாவில் மீட்கப்பட்ட சிறுவனின் சடலம்!
அநுராபுரம், மல்வத்து ஓயாவில் 8 வயது சிறுவனின் சடலமொன்று இன்று (04.12.2025) காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த சிறுவனின் சடலத்தை காவல்துறையினர், பிரதேசவாசிகள் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து மீட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி
அநுராபுரம், மல்வத்து ஓயா, மிஹிந்து புர பாலத்தின் மேலிருந்து கடந்த 2 ஆம் திகதி காலை 6.30 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க தாயொருவர் தனது இரு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த தாயை பிரதேசவாசிகள் இணைந்து காப்பாற்றியிருந்த போதிலும் கூட இரு பிள்ளைகளும் காணாமல் போயிருந்தனர். அவர்கள் இருவரையும் தேடி மீட்பு பணிகள் தீவிரமடைந்திருந்த நிலையில் இன்று (04.12.2025) 8 வயதுடைய சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
4 வயதுடைய மற்றைய சிறுமியை தேடும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
குறித்த தாயார் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது அநுராபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பேரிடர் நிலைமை
நாட்டில் நிலவி வந்த பேரிடர் சூழலால் பலர் தத்தமது உடைமைகள் அனைத்தையும் இழந்து அணிந்திருந்த ஆடையுடன் பல நாட்களை கழிக்க வேண்டிய ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது உண்மை.

எனினும், எந்தவொரு சூழலிலுல், எத்தகைய பொருளாதார நெருக்கடியிலும் இலங்கை மக்களாக நாம் அனைவரும் ஒன்றுகூடி சகோதரத்துவத்துடன் மற்றவர்களை பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும் என்பது இத்தகைய சம்பவங்களால் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
இதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் நிவாரணங்களை வழங்கி வரும் நிலையில் அரசாங்கமும் பல நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.
எந்தவொரு உதவிக்கும் தொடர்பு கொள்வதற்கான அவசர இலக்கங்கள் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |