சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு - யாழ்.மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவர் விசாரணைக்கு அழைப்பு
யாழ்ப்பாணம் ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக யாழ்.நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு யாழ்.மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
ஆறுகால்மடம் , கோம்பயன்மணல் மயானத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றினுள் இருந்து நேற்றைய தினம்(10) வியாழக்கிழமை சிதைவடைந்த நிலையில் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.
நேரில் சென்று விசாரணை
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், நேற்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத சடலங்கள், சத்திர சிகிச்சையின் போது அகற்றப்படும் உடல் உறுப்புக்கள் என்பவை மாநகர சபை ஊடாக கோம்பயன் மணல் மயானத்திலேயே புதைக்கப்பட்டு வந்துள்ளது.
உரிய முறையில் புதைப்பதில்லை
அவ்வாறு புதைக்கப்படுவதை மாநகர சபை பணியாளர்கள் உரிய முறையில் புதைப்பதில்லை, அதனால் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் அவற்றை இழுத்து செல்வதாகவும் , அதனால் அப்பகுதியில் துர்நாற்றங்கள் வீசுவதால், அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையிலையே, யாழ்.மாநகர சபை ஆணையாளர், அப்பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் மற்றும் கோம்பயன்மணல் மயானத்திற்கு பொறுப்பான உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.